துரை கௌரீஸ்வரன்
நாம் வாழும் இந்த உலகத்தின் வரலாறானது எப்போதும் போராட்டங்களின் வரலாறாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
உலகத்தில் வாழும் மனிதர்கள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்காக சதாகாலமும் போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த மனித இயங்கியலைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கும் போது அறிவின் தொழிற்பாடு அதிகரிக்கத் தொடங்கி விடும். மகிழ்ச்சிக்குத் தடையாக இருப்பது எது என்ற வினா மனதைக் குடையத் தொடங்கி விடும். மனிதர்களின் மகிழ்வுக்காக இடம்பெற்ற நடவடிக்கைகளைப் பற்றியெல்லாம் தேடுகின்ற அறிகின்ற ஆர்வங்கள் அதிகரிக்கும். உள்வீட்டுச் சமையலறை தொடங்கி உலகின் நடப்புக்கள் வரை பல்வேறு விடயங்களையும் பற்றி ஆராயும் மனோ நிலை வளர்ச்சியுறும்.
இத்தகைய நிலைமைகள் மிகப்பெரும்பாலும் 17,18,19 வயதுக் கட்டங்களையடையும் போது சாதாரணமாக ஒரு மனிதரில் ஏற்படும் சிந்தனை வளர்ச்சியாக அமைந்திருக்கும். உலக வரலாற்றில் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்காகப் புறப்பட்ட பல மனிதர்களுடைய வரலாறுகளை ஆராயும் போது அவர்களில் பெருமளவானோர் மேற்குறித்த வயதுக் கட்டங்களிலேயே போராடப் புறப்பட்டதை அறிய முடிகின்றது.
இத்தகைய சிந்தனைகள் மேற்படி வயதுக் கட்டங்களில் எனக்குள்ளும் ஏற்பட்டிருந்தன. இதன் காரணமாக உலக வரலாற்றில் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் போராட்டங்களில் ஈடுபட்ட மனிதர்கள் மீதான வசீகரம் அதிகரித்தது.
சேகுவேரா,மாட்டின்லூதர்,மகாத்மாகாந்தி, சுபாஸ்சந்திரபோஸ்,கோசிமின், லெணின்,மாவோசேதுங் எனப் பல விடுதலை வீரர்களைப் பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்தது.
இந்தத் தேடலில் உலகின் மனித விடுதலைக்கு ஒரே வழி வர்க்க விடுதலையினைச் சாத்தியப்படுத்துவதேயாகும் எனும் மாக்ஸீய சித்தாந்தத்தின் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. உலக மக்களின் விடுதலைக்கான ஒரே மார்க்கம் மார்க்ஸீயமே என்ற நம்பிக்கை வலுவாகியது. விமர்சனங்களுக்கு அப்பால் நின்று மாக்ஸியத்தை ஆதரிக்கும் மனோ நிலை அதிகரித்திருந்தது.
மாக்ஸீயத்தின் விஞ்ஞான பூர்வ அணுகுமுறைகளைப் பற்றிய பெருமைகளைப் பேசிக்கொள்ளும், மார்க்ஸீயத்தினால் உந்தப்பட்டு இடம்பெற்ற ஒக்டோபர் புரட்சி,சீனப்புரட்சி,வியட்னாம் யுத்தம், மாவோவின் நீண்ட பயணம், கியூபப் புரட்சி பற்றிய மேலோட்டான பெருமைகளைப் பற்றியெல்லாம் இருந்து கதைக்கும் (கணணியில் யுத்தம் செய்து விளையாடுவதைப் போல்) நிலைமை அதிகரித்து வந்தது.
சுருங்கச் சொன்னால் இந்த உலக மக்களின் விடுதலைக்கான மார்க்கம் மார்க்ஸீயம் ஊடாகவே இடம்பெற முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை என்னுள் திடமாக உருவாகியிருந்தது என்பேன்.
இத்தகைய பின்னணியில் ஓர் அரங்கியல் மாணவனாக பட்டப்படிப்பினைத் தொடங்கிய சூழலில் (2002,2003) பாரம்பரிய அரங்கில் முக்கியமான ஆராய்ச்சிச் செயற்பாட்டில் ஆய்வாளரின் உதவியாளராக ஈடுபடும் வாய்ப்பு வாய்க்கப்பெற்றது. (சீலாமுனையில் விரிவுரையாளர் சி.ஜெயசங்கர் அவர்களால் 2002,2003 களில் மேற்கொள்ளப்பட்ட கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வு) இக் கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்கு கொள் ஆய்வுச் செயற்பாட்டில் பங்குபற்றியதன் மூலம் பெண்ணிலைவாதச் சிந்தனைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்புக்கள் எனக்குக் கிடைக்கப்பெற்றன.
கூத்து மீளுருவாக்கம் பெண்ணிலை வாதம் பற்றிய அறிமுகத்தை வழங்கியதுடன் மனித விடுதலை பற்றிச் சிந்திக்கும் போது அதில் பெண்ணிலைச் சிந்தனைகளை உள்வாங்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளும் அறிவினை ஊட்டியது.
கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டினைத் தொடர்ந்து 2004 ஆம் வருடம் வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மூன்றாவதுகண் நண்பர்களுடன் பெண்ணிலைவாதச் சிந்தனைகள் பெண்ணிலைவாதச் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியான களப்பயிற்சிகளைத் திருமதி வாசுகி ஜெயசங்கர் (கமலா வாசுகி) அவர்கள் மேற்கொண்டு வந்தார். பெண்ணிலைவாதத்தினை நடைமுறைக்குக் கொண்டு வர பெண்ணிலைச் சிந்தனைகளின் பெறுமதியினை அறிந்து உணர்ந்து வாழும் ஆண்களை உருவாக்கிக் கொள்ளுதல் அடிப்படையானது என்ற நோக்குடன் அதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் திடநம்பிக்கையுடன் விசேடமாக மூன்றாவதுகண் குழுவில் சேர்ந்து செயற்பட்ட ஆண்களை மையமாகக் கொண்டு இத்திட்டத்தினை திருமதி கமலா வாசுகி அவர்கள் மேற்கொண்டு வந்தார்.
கூத்து மீளுருவாக்கத்திற்கான ஆய்வுச் செயற்பாட்டில் பங்குபற்றிய இளைஞர்கள் மத்தியில் உள்வாங்கப்பட்டிருந்த பெண்ணிலைச் சிந்தனைகளின் புரிந்து கொள்ளல் பற்றிய அவதானம் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளை எதிர்க்கின்ற ஆண்கள் குழுவினை உருவாக்குவதற்கான நம்பிக்கையினையும் மனோதிடத்தையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணிய நிலைநின்று நடத்தப்பட்ட இக்களப்பயிற்சியின் மூலம் நான் கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டினூடாக உள்வாங்கிய பெண்ணிலைவாதச் சிந்தனைகளை மென்மேலும் ஆழமாகவும் தெளிவாகவும் அறிந்து விளங்கி வாழ்வதற்கு கால்கோளிட்டது என்பேன்.
சிறுவர்கள் முதல் வளர்ந்தவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வீட்டு முற்றங்களிலும் கூத்துக்கள் பயிலும் மர நிழல்களிலும் ஒன்று கூடி மகிழ்வாகவும் உற்சாகமாகவும் கலைப்படைப்பாக்கங்களை வெளிப்படுத்தியவாறு கலந்து கொண்ட களப்பயிற்சிகளாக இவை இடம்பெற்றிருந்தன.
கருத்துக்களும் எண்ணக்கருக்களும் தெளிவாக உணர்த்தப்பட்டதால் அவற்றின் வெளியீடுகளாக ஆக்கபூர்வமான பாடல்களும், கவிதைகளும், கட்டுரைகளும் பங்குபற்றுனர்களுடாக வெளிவரத்தொடங்கின. ‘சிந்தனை மனிதரைப் பற்றும் பொழுது அது பௌதீக சக்தியாக வடிவமெடுக்கும்’ என்ற கார்ள்மாக்ஸின் கூற்றிற்கிணங்க கமலாவாசுகியின் களப்பயிற்சி தந்த பெண்ணிலைச் சிந்தனைகள் கலைப்படைப்புக்களாக ஆண்களால் உருவாக்கப்பட்டன.
களப்பயிற்சி தந்த அறிவும் அனுபவங்களும் அதன் விளைவான கலையாக்கங்களையும் ஒன்றிணைத்து பொது வெளியில் உரையாடுவதற்காக ஒரு தெருவெளி அரங்க ஆற்றுகை உருவாக்கம் பெற்றது. இவ்வரங்க ஆற்றுகை பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான ஆண்கள் குழுவின் செயல்வாத அரங்காக அறிமுகம் செய்யப்பட்டது.
இதனூடாக செயல்வாத அரங்கு என்பது ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கான செயற்பாட்டாளர்களின் அரங்கு என்பது வலியுறுத்தப்பட்டது. அதாவது இந்த அரங்கில் பங்குபற்றுவோர் தாம் கூறும் விடயத்தினைத் தமது வாழ்வில் நடைமுறைப்படுத்துனர்களாக இருக்க வேண்டும் என்பது மிகவும் அடிப்படையானதாகக் கொள்ளப்பட்டது. ‘சாத்தான்கள் வேதம் ஓதும்’,’படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்’ போன்ற பண்புகள் கொண்ட அரங்குகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஓர் அரங்க வடிவமாக இச் செயல்வாத அரங்கு முன்னெடுக்கப்பட்டது. முன்மொழியப்பட்டது.
பங்குபற்றுனர்களிடையே ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவரும் உத்திகளைக் கொண்ட அரங்கச் செயல்வாதமாக இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. பால்நிலைச் சமத்துவத்திற்கான சிந்தனைகளைப் பரவலாக்கி நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான அரங்கச் செயலாக இது பரிணாமம் பெற்றது.
ஆண்களால் வெளியிடப்பட்ட இந்தக் குரல்கள் ஆதரவுக் குரல்களேயன்றி ஒருபோதும் மற்றுமொரு ஆதிக்கக் குரல்களாக மாறிவிட மாட்டாது என்பதில் ஆண்கள் மிகவும் தெளிவுடன் இயங்குவதற்கான,செயலாற்றுவதற்கான அறிவு இக்களப்பயிற்சியில் வழங்கப்பட்டிருந்தது. நடைமுறைச் சாத்தியத்திற்குரிய பால்நிலைக் கற்கைகளுக்கான உபாயமாக இவ்வரங்க உருவாக்கச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
எழுத வாசிக்கத் தெரியாதவர்களும் எழுத்தறிவுள்ளவர்களும் வேறுபாடுகளற்ற முறையில் சேர்ந்தியங்கி மகிழ்ந்து அறியும், எண்ணங்களைப் பகிரும் கற்கை வெளியாக இச்செயல்வாத அரங்கு நடைபெற்றிருந்தது. ஏப்படி ஒரு அரங்க விளையாட்டினை விளையாடும் போது மகிழ்ச்சியுடன் எமக்கு வேண்டிய திறன்களை விருத்தி செய்து கொள்கின்றோமோ அதே போல் இச்செயல்வாத அரங்கிற்கான களப்பயிற்சிகளூடாக நாம் மகிழ்வான வாழ்வுக்குரிய பெண்ணிலைவாதச் சிந்தனைகளை நடைமுறைப் பிரயோகத்திற்குரிய வகையில் பெற்றுக்கொள்ள முடிந்தது.
மனித குலத்தின் நிலையான நிம்மதியான மகிழ்வான தன்னிறைவான சமத்துவமான வாழ்விற்குரிய வழிகாட்டும் சிந்தனைகளாக பெண்ணிலைச் சிந்தனைகள் உள்ளன என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது. அதாவது பெண்ணிலை வாதம் அதிகாரத்திற்கு எதிரான, அழித்தொழிப்புக்களுக்கு எதிரான,சுரண்டலுக்கு எதிரான, ஒவ்வொரு உயிரின் பெறுமதியையும் மதிக்கும் மனித முகத்தைக் கொண்ட சிந்தனைகளின் தொகுதியாக உள்ளது என்பதனை விளங்கிக் கொண்டோம்.
இந்த உலகத்தின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்கள் பலவும் ஒரு கட்டத்தில் மற்றொரு ஒடுக்கு முறையாக மாறிச் சின்னாபின்னப்பட்டதற்குரிய அடிப்படைக் காரணங்களுள் ஒன்று அவைகள் பெண்ணிலைச் சிந்தனைகளை உள்வாங்காமையே ஆகும் என்ற உறைப்பான உண்மையினை உணர்ந்து கொள்ள இக்களப்பயிற்சி காரணமாக இருந்தது.
மனிதர்களின் விடுதலைக்கான பெண்ணிலைவாதிகளின் போராட்டம் என்பது வன்முறையற்ற வகையில் ஒடுக்கும் தரப்பினரையும் மனிதராக மதித்து அவர்களையும் மனித விடுதலைக்கான நீதியான போராட்டக்காரர்களாக மாற்றும் நோக்கங்களுடன் கூடிய தொடர் செயற்பாடுகளாகும் என்பதை விளங்கிக் கொண்டோம்.
ஓவ்வொரு ஆண்பிள்ளைகளையும் சமநிலையற்ற தன்மைகளிலிருந்தும் வன்முறைமிக்க மனோ நிலைக்கு மாற்றமுறச் செய்வதிலிருந்தும் விடுவித்து உண்மையான முழு நிறைவான ஆளுமைகளாக உருவாக்குவதற்கான வாழ்க்கை நெறியாக பெண்ணிலைச் சிந்தனைகள் கூறும் வாழ்வியல் முறைகள் உள்ளன என்பது முக்கியமாகும். மனிதர்களின் மகிழ்வான வாழ்விற்கு இட்டுச்செல்லும் வாழ்க்கைத் தத்துவமாக பெண்ணியச் சிந்தனைகள் இருந்து வருகின்றன.
இந்த உலகம் எதிர்நோக்கும் சகலவிதமான பிரச்சினைகளிலிருந்தும் சேதாரங்களின்றி விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள் பெண்ணிலைச் சிந்தனைகளூடாக வலியுறுத்தப்பட்டுள்ளன. இச்சிந்தனைகள் அனைத்தும் உலகம் எங்கும் வாழ்ந்துவரும் பல்லாயிரக்கணக்கான பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சியான அயராத செயற்பாடுகளூடாகக் கண்டறியப்பட்ட உண்மைகளாக உள்ளன.
‘தத்துவவாதிகளோ உலகத்தைப் பற்றி விபரிக்கிறார்கள் நாமோ உலகத்தை மாற்றுவதற்காக முயலுகின்றோம்’ என கார்ள்மாக்ஸ் கூறியுள்ளார.; உண்மையில் உலகத்தை கார்ள்மார்க்ஸ் எதிர்பார்த்த மனித சமத்துவத்திற்குரியவாறு மாற்றுவதற்காக பெண்ணிலைவாதிகள் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே இன்றைய யதார்த்தமாகும். இவர்கள் ஊடகங்கள் போற்றும் பிரபல்யம் மிக்க விடுதலைப் போராளிகளாகவன்றி சாதாரண மனிதர்களாக வாழ்ந்து கொண்டே மாற்றத்திற்காக கணந்தோறும் செயலாற்றிக் கொண்டுள்ளனர்.
‘ஊரில் நல்லவர்கள் ஒருசிலர் வாழ்வதாலதான் மழை பெய்கின்றது’ என்று ஒரு முதுமொழியுண்டு அது சரியோ பிழையோ… ஆனால் ஏகாதிபத்திய வல்லரசுகள் கோலோச்சும் ஆபத்துக்கள் அதிகரித்த இந்த உலகில் மனித உரிமைகளும் வாழ்வுரிமைகளும் குறைந்தபட்சமேனும் உறுதிப்படுத்தப்படுவதற்கு முகமறியாத பல்லாயிரம் பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளே காரணங்களாக இருந்து வருகின்றன என்பது மட்டும் உண்மையாகும்.
இத்தகைய உலகந் தழுவிய பெண்ணியச் செயற்பாடுகளுள் ஒன்றுதான் நாங்கள் பங்குபற்றிய செயல்வாத அரங்கக் களப்பயிற்சிகளும் அவற்றின் முன்னெடுப்புக்களும் ஆகும்.
ஆண்களின் செயல்வாதமும் என்னுள் ஏற்பட்ட நடத்தை மாற்றங்களும்…
2004 இல் மூன்றாவதுகண் நண்பர்களிடையே நடத்தப்பட்ட பெண்ணிலைவாதக் களப்பயிற்சியின் பின்னர் அது எனக்கு வழங்கிய அறிவும் அதிர்வுகளும் பெண்ணிய நோக்குடன் பல்வேறு விடயங்களையும் பார்க்கும் மனோ நிலையினை ஏற்படுத்திவிட்டுள்ளது. பெண்ணிலை நின்று பார்க்காத எந்தவொரு விடயமும் குறைபாடுடையதாகவே தெரிகின்றது.
மனிதன் என்று பொதுவாகக் கூற முடியாதுள்ளது மனிதன் மனிதன் என்று எழுதப்பட்டுள்ள எழுத்துக்களைப் பார்க்கும் போது அதன்மீது வெறுப்புணர்வு ஏற்படுகின்றது. நிறைவற்றதாகவே அந்த எழுத்துக்களை மனது கருதுகின்றது. சந்திரனில் உள்ள களங்கம் போலவே சில பெறுமதியான நூல்களிலுள்ள மனிதன் மட்டுமான பதிவு எனக்குக் காட்சியளிக்கின்றது.மாணவர்களுக்குக் கற்பிக்கும் போது மனுசியை மறந்து மனிதனை மட்டும் பொதுமைப்படுத்திக் கூறுவதற்கு எனது நாக்குத் தயங்குகின்றது. மனுசியை உள்ளடக்கிய மனிதன் என்ற சொல்லினை எழுத என் கைகள் பின்நிற்கின்றன.
நான் ஒரு ஆசிரியராக மாணவர்களின் எழுத்துக்களை வாசிக்கும் போது மனிதன் என்று எழுதப்பட்டிருந்தால் ஆண்கள்; மட்டுந்தானா உள்ளனர் பெண்கள் இல்லையா ? ஏன் பெண்களைக் குறிப்பிடவில்லை என்று கேள்விகளை எழுப்பி மாணவர்களுடன் ஆக்கபூர்வமாக உரையாடி வருகின்றேன்.
மாணவர்களுடன் களப்பயிற்சிகளை நடத்தும் போது பால்நிலைச் சமத்துவத்திற்கான செயற்பாடுகளைக் கவனத்தில் கொண்டு வருகின்றேன். பால்நிலைப் பாகுபாடு சிறு வயதிலிருந்தே ஊட்டப்படுவதால் சிறுவர்களுடன் சிறுவர் நாடக அரங்கச் செயல்களில் ஈடுபடும் போது அதில் பால்நிலைச் சமத்துவத்திற்கான எண்ணக்கருக்களை விதைத்தல்,நடத்தைகளைப் பயிற்றுவித்தல் எனது நோக்கமாக இருந்து வருகின்றது.
ஏதிர்காலத்தில் வன்முறையற்ற சிறந்த அப்பாமார்களை உருவாக்க வேண்டியது ஒரு ஆசிரியரின் பிரதான கடமையாகும் ஏனெனில் இன்று மிகப்பெரும்பாலும் அப்பாமார்களாலேயே குடும்பங்கள் சீரழிந்து குடும்ப வன்முறைகள் பெருகி மனிதரிடையே மனச் சமாதானம் சூனியமாகி வருகின்றது.எதிர்காலத்தில் நாட்டில் சமாதானம் உறுதிப்படுத்தப்படுவதற்கு குடும்பங்களில் சமாதானம் நிலைநிறுத்தப்படுவது அடிப்படையானது. எனவே குறிப்பாக ஆண்பிள்ளைகளைக் கருத்திற்கொண்டு அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்கும் நோக்குடன் எனது ஆசிரியப் பணியினைச் செய்து வருகின்றேன்.
நாம் இதுவரை அறிந்த நம்பிய கொண்டாடிய பல்வேறு விடயங்களையும் பெண்ணிலைப் பார்வைகளுடன் கட்டவிழ்த்துப் பார்க்குப் பார்வைப் போக்கு அதிகரித்துள்ளது. ஏந்தவொரு செயற்பாடுகளிலும் ஆழ இழையோடும் பால்நிலைப் பாராபட்சங்களைத் தேடும் நுண்ணாய்வுப் பாங்கு வளர்ந்துள்ளது.
நமது சூழலில் மிகப்பெரும்பாலும் உருவத்தில் பெண்ணாகவும் கருத்தியலில் ஆணாதிக்க சிந்தனைகளோடும் வாழும் நபர்களை இனங்காண இக்களப்பயிற்சி அறிவூட்டியது. இது பெண்கள் தானே பெண்களுக்கு எதிரி என்று ஆணாதிக்கம் கூறும் வாதத்தின் பொய்மையை தெளிவாக விளங்கிட வைத்தது. ஆணாதிக்க சிந்தனைகளைக் கடத்துபவர்களாக பெண்கள் வடிவமைக்கப்பட்டுள்ள வரலாற்றினைக் கட்டவிழ்த்துக் காட்டியது.

பெண்ணிலைச் சிந்தனைகள் முனைப்படைந்துள்ள இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய சிந்தனையாக ஆண்ணிலை :நோக்கு இருக்கிறது.
ஆண்கள் கௌரவமான இருப்பை மீள உருவாக்குதல் மிக முக்கியமான தேவையாக உள்ளது